எண்ண ஓட்டங்கள் - பதிவு இரண்டு
வானகம் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் கூடுகை நவம்பர் 26, 2023 அன்று ஈரோடு அருகே திரு.குமார் அவர்களின் "மருதம் இயற்கை வேளாண் பண்ணை"யில் நடைப்பெற்றது. இந்த பயிற்சி மற்றும் வானகம் அமைப்பினர் நடத்தும் மற்ற பயிற்சிகள் குறித்து மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள இணைப்புகள் 1,2 சொடுக்கவும்.
(அ) எந்த வகையிலும் விவசாய பின்புலம் இல்லாத எனக்கு இந்த பயிற்சியில் பங்கெடுக்க அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை என்பதே பெரிய வரம். :)
(ஆ) பயிற்சி நாள் அன்று, நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே, உதவி செய்கிறேன் என்ற பெயரில், நறுக்கி வைத்திருந்த மாங்காய் சட்டியைக் கொட்டினேன். அத்தோடு நிற்காமல், கொட்டியதற்கு பரிகாரமாக மீதமிருந்த மாங்காயை துண்டு துண்டாக நறுக்கலாம் என்ற முயற்சியில், இடதுகை பெருவிரலில் சிறுவெட்டு. வெட்டுண்ட இடத்தில் தண்ணீர் கொண்டு துடைத்துக்கொண்டேன். இதனைப் பார்த்துவிட்டு திரு.குமார் அவர்கள் அருகிலிருந்தவர்களிடம் ஏதோ சொல்ல, ஒரு நண்பர் பக்கத்திலிருந்த தோட்டத்துக்குள் சென்று (அவருடைய) கையளவு இலைகளைக் கொண்டுவந்து காயம்பட்ட இடத்தில் நன்றாக பிழிந்துவிட்டதுடன், அந்த இலைகளை அதே இடத்தில் சற்று அழுத்தி வைத்தார். சிறிது நேரத்தில் இரத்த ஓட்டம் நின்றுவிட்டது :) அந்த தோழரின் பெயர் திரு.அருள்ஒளி, அவர் கொண்டு வந்த மூலிகை அரிவாள்மனை பூண்டு.
இயற்கையுடன் ஒன்றிய வாழ்வென்பது, பயிர் வளர்ச்சிக்கு இராசயான நஞ்சுகளை தவிர்த்தல் மட்டுமில்லை, நமது அன்றாட தேவைகளுக்கு தோட்டத்துச் செடிகளையே மூலிகைகளாக கண்டைடவதும் தான் என்று உணர்ந்தேன்!
(இ) குறிப்பிட்ட நேரத்தில், கூடுகை தொடங்கியது. வந்திருந்தோரை ஒரு பெரிய வட்டமாக அமர செய்தது, பேச்சாளரின் கவனமும், வீச்சும் எல்லோரையும் சென்றடையுமாறு அமைந்தது. இது ஒரு நல்ல யுக்தி.
(ஈ) பங்கேற்பார்களுக்கு சத்தான காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இத்துடன், காலையும் மாலையும் அவர்கள் கொடுத்த மூலிகை கசாயம் மிக அருமையாக இருந்தது.
(உ) மருதம் குமார் அவர்களின் உரையுடன் காலை நிகழ்ச்சிகள் துவங்கின. ஐயா நம்மாழ்வாருடன் அவரின் பயணங்களை விவரித்தார். பசுமை புரட்சி என்ற போர்வையில் எழுதுபகளில் தொடங்கி இன்று வரை இந்தியாவில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் அட்டூழியங்கள், விதை அபகரிப்புகள், இவற்றுக்கு துணைபோகும் இந்நாட்டு அரசு சார்ந்த நிறுவனங்கள் குறித்தும் விளக்கினார்.
(ஊ) இதனை தொடர்ந்து, பங்கேற்பாளர்களின் பொதுவான அறிமுகம். அதிலும் குறிப்பிட்டோரை பெயர் சொல்லி அழைத்தார் மருதம் குமார். அந்த நண்பர்கள் தங்களின் நடவடிக்கைகளை விவரிக்கையில், மருதம் குமார் ஏன் அவ்வாறு செய்தார் என்று உணந்தேன்!
சிலர் குழுவாக இணைந்து இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நண்பர் தன் பண்ணையில் வேலைப்பார்க்கும் குடும்பங்களை அல்லது குடும்ப உறுப்பினர்களை பங்காளர்களாக இணைத்துக்கொண்டுள்ளார். மற்றொருவர், இயற்கை சார்ந்த மருத்துவத்தில் கவனம் செலுத்தி அதனை முன்னெடுப்பவராக இருந்தார்.
(எ) பின்னர், 'வானகம்' ரமேஷ் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தினார்.
(ஏ) மதிய உணவுக்குப்பின், மருதம் குமாரின் பண்ணை விவரிப்பு நடந்தது. அத்துடன் நிற்காமல், பண்ணை அமைப்பு, அங்குள்ள பல்வேறு வகையான பயிர்கள், மரங்கள், மூலிகைச்செடிகள் குறித்து மிக விரிவாக அவரே விளக்கியது சாலப்பொருத்தம்.
மருதம் குமார் அவர்களின் பண்ணை கோபிசெட்டிபாளையம் அருகே தொட்டியங்காட்டில் அமைந்துள்ளது. ஆனால் இங்கே வந்ததற்கான காரணத்தைக் கேட்கையில் மனம் கனத்தது. இங்கு வருவதற்கு முன்னர் சத்தியமங்கலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார் ... சத்தியமங்கல விரிவாக்கத்தினால் நகர கழிவுகள் அனைத்தும் இவரது பண்ணைக்கு அருகாமையிலேயே தொடர்ந்து கொட்டப்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் மாற்று வழியின்றி அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதன்பின்னர் தொடர்ச்சியான வெவ்வேறு நிகழ்வுகளால் இயற்கை வேளாண்மைக்கு உந்தப்பட்டு தொட்டியங்காட்டில் நிலம் வாங்கி ... உரங்களை கொண்டு தயாரித்த தேங்காய்களுக்கும் அவரது பண்ணையில் இயற்கை முறையில் விளைவித்த தேங்காய்களுக்குமான விற்பனையில் ஏற்பட்ட ருசிகரமான சம்பவங்கள் ...
(ஏ) மதியம் ... பயிர் வளர்ப்புக்கு தேவையான பூச்சி விரட்டி, பஞ்ச காவியம், அமிர்த கரைசல், பழ கரைசல், மீன் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள்.
(ஐ) இறுதி ... கேள்வி பதில், அதுவும் வட்டமாக அமர்வு.
முடிந்து அனைவரும் கிளம்பும் நேரத்தில் ... மழை தூறல் ஆரம்பமானது.
இணைப்புகள்;
(1) https://vanagam.org/posts/38-26
(2) https://vanagam.org/trainings
Comments