பரங்கிப்பேட்டைக் கடிதம் --- பாகம் இரண்டு
லா.காதர் பாஷ்ஷா என்பவரால் பரங்கிப்பேட்டையிலிருந்து அவரது முதலாளி சித.ப.மு.வீ.அழகப்பா செட்டியாருக்கு 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் எழுதிய கடிதத்தின் முழுமையான ஒளிவடிவம்.
இக்கடிதத்தின் பொருளடக்கம்:
"முதலாளி அவர்களுக்கு காதர் பாஷ்ஷா எழுதிக்கொண்டது. செப்டம்பர் மாதம் 13 தேதி பிரப்படும் (புறப்படும்) பிரஞ்சு மெயிலில் சைகோனுக்கு பட்டாளம் (போர் வீரர்கள்) ஏத்திக் கொண்டு போகும்படி புதுச்சேரிக்கு தந்தி வந்துவிட்டதாம். அதனால் செக்கன் கிளாசும் (இரண்டாம் வகுப்பு) பஷ்ட் கிளாசும் (முதல் வகுப்பு) டிகட்டு (டிக்கெட்டு) கொடுக்கிறார்களாம். இந்த கப்பல் காரைக்காலுக்கும் வரவில்லை. இனி பிரஞ்சு மெயிலை எதிர்பார்த்தால் இரண்டு மாதமாகும். ஊர்கப்பலில் போகலாமென்ரு (போகலாமென்று) யோசித்துயிருக்கிறேன். அதில் போகலாமென்று தங்கள் எழுதினால் அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் ஆவணி கடைசியாக போகலாம். தாங்கள் யோசனை போல பிறப்பட தயாராயிருக்கிறேன் சுணங்காமல் உடனே எழுதி அனுப்பவும். புதுச்சேரி போய் இன்றுதான் பறங்கிப்பேட்டைக்கு (பரங்கிப்பேட்டை) வந்தேன். இவ்விடத்திலிருந்து மதராசுக்கு இன்றைய தினம் எனக்கு வேண்டிய ஆசாமி ஒருவர் இந்த பிரஞ்சு மெயில் விஷயமாய் (insert image of the word) (போகிறார்). அவரிடமும் சொல்லியனுப்பியிருக்கிறேன் கிடைத்தால் இந்த கப்பலுக்கு டிகட்டு வாங்கிவிடுகிறேன். எல்லாவற்றிக்கும் ஆவணி மாதம் கடைசிக்குள் போகவேண்டியதர்க்கு (போகவேண்டியதற்கு) லெட்டர் எழுதும்படியாய் கேட்டுக்கொள்ளுகிறேன். எனக்கு வீண் சிலவு (செலவு) ஜாஸ்தி ஆகிரபடியால் (ஆகிறபடியால்) சும்மாயிருந்துக்கொண்டு சிலவு செய்ய வேண்டியதாய்யிருக்கிறது (வேண்டியதாயிருக்கிறது). இப்படிக்கி லா.காதர்பாஷ்ஷா.
எழுத்துமுறை மற்றும் சொற்களைக் குறித்து சில குறிப்புகள்.
(1) டிக்கெட்டு என்பது 'டிகட்டு' ஆனது.
(2) போகலாமென்ரு & போகலாமென்று என்று வெவ்வேறு வகையாக எழுதியிருப்பது.
(3) 'னை' என்பதை, அந்த காலத்திய வழக்கப்படி, ன-விற்கு முன்பக்கவாட்டில் மேலிருந்து கீழே கொக்கிபோன்று சுழித்து எழுதப்பட்டுள்ளது.
(4) 'னா' என்பதை, ன-விற்கு சற்றுக் கீழே ஒரு முழு சுழி சுழித்து எழுதப்பட்டுள்ளது.
(5) 'னு' என்பதை, ன-விற்கு சற்றுக் கீழே பக்கவாட்டிலு ஒரு அரை சுழி சுழித்தப்பின் அதையொட்டி ஒரு நேர்கோடு மேலே இழுத்து எழுதப்பட்டுள்ளது.
(6) '...பிறப்பட' & தயாராயிருக்கிறேன் என்பதில் வருகின்ற நெடில் 'ரா' என்பதை வேறுவடிவத்தில் எழுதியிருப்பதை காணலாம்.
(7) ஊர் பெயரான பறங்கிபேட்டை & பரங்கிபேட்டை .
Comments